பிரான்ஸ் - பாரிஸில் முதல் குழந்தைக்கு குரங்கு அம்மை தொற்றியது!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
ஆரம்பப் பள்ளி (école Primaire) செல்லும் குழந்தை ஒன்றுக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வளர்ந்தவர்களில் மட்டுமே அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் நோய் குழந்தைகளில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அம்மை தொற்றிய அந்தக் குழந்தைக்கு மிகச் சாதாரணமான அறிகுறிகளே வெளிப்பட்டுள்ளன என்றும் அவரோடு தொடர்புடைய ஏனைய குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தையின் குடும்ப உறவினர்களிடையே ஒருவர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல், சொறி (fever, rash) அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரது ஆலோசனை பெறுமாறு பெற்றோர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் பாரிஸ் பிராந்தியத்திலேயே குரங்கு அம்மை (monkeypox) தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 330 தொற்றாளர்களில் 227 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் (Île-de-France) வசிப்பவர்கள் ஆவர்.

பெரியம்மை (smallpox) குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் தொற்று நோயாகிய குரங்கு அம்மை அதனை விட உயிர் ஆபத்தில் குறைவானது ஆகும்.

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் உள்ளூர் தொற்று நோயாக மாத்திரம் காணப்பட்டுவந்த குரங்கு அம்மை கடந்த மே மாதம் முதல் ஐரோப்பா, அமெரிக்கா அடங்கலாக உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

குரங்கு வைரஸின் இந்தத் திடீர்ப் பெருக்கம் மிகவும் கவலைக்குரியது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் கட்டத்தில் அது இன்னமும் "ஓர் உலகளாவிய தொற்றுநோய்" என்ற நிலைமையை எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post