இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்த கொரோனாத் தொற்று! நீக்கப்படவிருந்த கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
இங்கிலாந்தில் கோவிட் -19 கட்டுப்பாடு களை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இறுதி நாள் மேலும் நான்கு வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் பொறிஸ் ஜோன் சன் இன்று வெளியிட்டிருக்கிறார். 

முடக்கத்தின் முடிவுநாள் ஜூன் 21ஆம் திகதியில் இருந்து ஜூலை 19 ஆம் திகதிக்கு நகர்த்தப்படுகிறது.

அதன்படி அருந்தகங்கள், சினிமா போன்றவற்றில் ஆட்களின் எண்ணிக்கையை வரையறை செய்தல் போன்ற கட்டுப்பாடுகள் மேலும் நான்கு வாரகாலம் நீடிக்கும்.

இரவு விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டருக்கும். நான்கு வாரங்களுக்கு மேலும் கட்டுப் பாடுகளை நீடிக்க வேண்டிய நிலை தோன்ற மாட்டாது என நம்புவதாகப் பிரதமர் கூறியிருக்கிறார்.

அங்கு நாடு முற்றாகக் கட்டுப்பாடுகளில் இருந்து விலகும் இறுதித் தினம் ஒரு "சுதந்திர நாள்" ("Freedom Day”) போன்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது. ஆனால் இந்தியத் திரிபு வைரஸ் அதனைக் குழப்பிவிட்டிருக்கிறது.
 
இந்தியாவில் தோன்றி உலகெங்கும் பரவிவருகின்ற டெல்ரா வைரஸின்(Delta variant) தொற்று அதிகரித்து வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு தொற்றாளர் எண்ணிக்கை வாராந்தம் 64 வீதத்தால் அதிகரித்து வருகிறது.
  • தடிமன், தலையிடி, மூக்கு வடிதல் டெல்ரா வெளிப்படுத்தும் அறிகுறி
இதேவேளை - இங்கிலாந்தில் டெல்ரா வைரஸ் இளவயதினரிடையே தடிமன் போன்ற புதிய அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றது.
 
சாதாரணமாகப் பலருக்கும் தோன்றும் தலையிடி, தொண்டை வரட்சி, மூக்கு
வடிதல் போன்றன தற்சமயம் டெல்ரா வைரஸ் (இந்திய திரிபு) தொற்றாளர்களில் பொதுவான நோய் அறிகுறிகளாகமாறி உள்ளன. 

எனவே பருவகால சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளோர் தங்களை வைரஸ் சோதனை செய்து கொள்வது நல்லது என்று இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் தற்சமயம் 90 வீதமான தொற்றுக்களுக்கு 'டெல்ரா' என்கின்ற இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது இங்கிலாந்தில் தோன்றிய அல்பா (Alpha) திரிபை விடவும் 40-80வீதம்
வேகமாகப் பரவும் தன்மை வாய்ந்தது.
Previous Post Next Post